தமிழக மாணவணின்,மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவி



ஓசூரில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ். இவர், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அந்த மாணவருக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருதை கடந்த 15-ம் தேதி வழங்கி கவுரவித்துள்ளார்.  தேசிய அளவில் நன்மை தருகிற, புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே குடியரசுத் தலைவரின் `இன்னொவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில் மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் வடிவமைத்திருக்கும் கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது.

ஜனாதிபதி கையில் விருது வாங்கிய மாணவர் ஆகாஷ், ஓசூரில் நேற்று அளித்த பேட்டியில், இந்த கருவியை கண்டுபிடித்ததன் மூலமாக உண்மையில் மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் என்னைப் பாராட்டினார். பிரதமர் மோடியும் எனது கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ந்து பாராட்டினார் என கூறியிருந்தார்.


முன்னதாக நமது நிருபருக்கு ஆகாஷ் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,  "சின்ன வயசுல இருந்தே எனக்கு மருத்துவ அறிவியல்ல ரொம்ப ஈடுபாடு. எட்டாம் கிளாஸ் படிக்கும்போது, பெங்களூர்ல இருக்குற `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ல இருக்குற லைப்ரரிக்கு அடிக்கடி போவேன். ஓசூர்ல இருந்து அங்கே போக ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, அது எனக்குப் பெருசா தெரியலை. ஏன்னா, மருத்துவப் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்கிப் படிக்க அதிகச் செலவாகும். அப்பிடி நான் படிச்ச கட்டுரைகளைக் கணக்குப் போட்டா லட்சக்கணக்கான ரூபாய் செலவாகியிருக்கும். அதே மாதிரி பல அறிவியல் கூட்டங்கள்ல போய் கலந்துக்குவேன்... கத்துக்குவேன்.’
பல பேர் பரீட்சையை நினைச்சு கவலைப்படுறாங்க. எனக்கு படிப்பு எப்பவும் கஷ்டம் கொடுத்ததே இல்லை. பல அறிவியல் கண்காட்சிகள்ல என் புராஜக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன். போன வருஷம், ஜப்பான்ல இருக்கும் `டோக்கியோ யுனிவர்சிட்டிய் ஆஃப் சயின்ஸ்’ல இருந்து என்னை கூப்பிட்டிருந்தாங்க. என்னோட ஒரு புராஜக்ட்டுக்கு அவங்க அங்கீகாரம் குடுத்திருக்காங்க. என் ஸ்கூல்லயும் நல்ல ஆதரவு தர்றாங்க. நான் வடிவமைச்சிருக்கும் இந்தக் கருவி தோலில் ஒட்டக்கூடியது (Patch). இதை கை மணிக்கட்டுலயோ, காதின் பின்புறத்துலயோ பொருத்திக்கலாம். இதுல இருந்து சின்னதா ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையாக வெளியாகும் எதிர்மறை (நெகட்டிவ்) புரோட்டீனை ஈர்க்கும். இதன் மூலமா, எஃப்.ஏ.பி.பி.3 புரோட்டீனின் அளவு அதிகமாக இருந்தா, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுதுனு புரிஞ்சிக்கலாம்.


ஏற்கெனவே என் கருவிக்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செஞ்சுட்டேன். இனி இதை விற்பனை செய்யணும். அதுக்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்புகொண்டிருக்கேன். உயிரியல் தொழில்நுட்பத் துறையோட (Department of Biotechnology) கூட்டு சேர்ந்து இந்தக் கருவியைத் தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு உதவி செஞ்சது நம் குடியரசுத் தலைவர்தான். என் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்குப் பதிலா அரசே ஏத்துக்கிட்டு, செயல்படுத்தணும்கிறது என் ஆசை. அப்போதான் வெறும் 900 ரூபாய்க்குக்கூட இது சந்தையில கிடைக்கும். அதுதான் பொதுமக்களுக்கு நன்மை தரும்"  என்று அழுத்தமாக சொல்கிறார் ஆகாஷ்.