பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சவாலான இலக்கிற்கு முன்னேறியுள்ளது.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
ரங்கன ஹேரத் 18 ஓட்டங்களுடனும் தினேஸ் சந்திமால் 86 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
இலங்கை அணி 305 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஒன்பதாவது விக்கெட்டினை இழந்தது.
டெஸ்ட் அரங்கில் தனது எட்டாவது சதத்தினை எட்டிய தினேஸ் சந்திமால் 138 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி மேலதிகமாக 33 ஓட்டங்களைப் பெற்ற போதும் இறுதி விக்கெட்டினை இழந்தது.
சுரங்க லக்மால் 35 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பந்துவீச்சில் மெஹிடி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுக்களையும் சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 இற்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

