சாரதி ‘கோல்’ எடுத்தார்; ஆன்சர் கிடைத்தது 300 அடிப் பள்ளத்தில்



நாவலப்பிட்டியவிலிருந்து தொலோஸ்பாக நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், ​கோணவலபத்தன 5ஆம் மைல்கல் பிரதேசத்துக்கு அருகில் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.  நேற்று(05) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 64 ​பேர் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி, கண்​டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளரை். 

 அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் 17பேர், 21 பெண்கள், 26 ஆண்கள் உள்ளதாக நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.  அத்துடன், காயமடைந்தவர்களில் கர்ப்பிணிப் பெண், மாணவர் இருவர் உள்ளிட்ட 8 ​பேர், கண்டி போ​தனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.  நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ,தொலஸ்பாகே, மேரிவில தோட்டத்தைச் ​சேர்ந்த கருப்பையா தங்கராஜா (வயது 54) என்பவர், நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.  விபத்துக்குள்ளான பஸ் பயணித்த வீதியானது கடும் வளைவுகளுடன் கூடிய, குறுகிய வீதி என்பதுடன் விபத்துக்குள்ளான பஸ் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இந்த பஸ்ஸில் பயணித்த மேரிவில தோட்டத்தைச் சேர்ந்த சமீரா (வயது 24) என்பவர் கூறுகையில், “பஸ் சாரதி அலைபேசியை எடுத்து, (கோல்) எடுத்த போதே, சடுதியான குலுங்கலுடன் பஸ் பள்ளத்தில் விழுந்து விட்டது.” என்றார்.  இந்த விபத்துக் குறித்து தெரிவித்த, அஞ்சலி சமீரா, “எனது 2 வயதான மகனுடன் பொருட்கள் வாங்குவதற்கு நாவலப்பிட்டிய நகரத்துக்கு நான் வந்தேன். முற்பகல் 11.30 மணியளவில், தொலோஸ்பாகே பஸ்ஸில் ஏறினேன்.  பஸ்ஸில் பயணிக்கும்போது கோணவலபத்தனவில் வைத்து, பஸ்ஸின் சாரதி அலைபேசியில் கதைத்துக்கொண்டு வருவதை கண்டேன். அதேநேரத்தில் பஸ்ஸின் பிரேக் அழுத்தப்பட்டதைப் ​போல தெரிந்தது. அத்துடன் பஸ் சடுதியாக வீதியில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது.  எனது மகன், பஸ்ஸின் இருக்கைக்கு கீழே விழுந்து கிடந்தார். பஸ்ஸில் உள்ளவர்கள் இணைந்து எங்களை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்” என்றார்.  இதேவேளை, தைகெடி தோட்டத்தை சேர்ந்த என்.ராஜா என்பவர் இந்த விபத்து தொடர்பில் தெரிவிக்கையில், “நான் மருந்து வாங்குவதற்காக நாவலப்பிட்டியவுக்கு வந்தேன். பஸ்ஸில் பயணிகள் கூட்டமாக இருந்தனர். புத்தாண்டு வருவதால், பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவானோர் வந்திருந்தனர். 

5ஆம் மைல்கல்லில் வைத்து பஸ்ஸின் பிரேக் அழுத்தப்பட்டது ​​போல தெரிந்தது. அத்துடன் பஸ் ஒரு பக்கம் சாய ஆரம்பித்தது. பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். ஒவ்வொரு பக்கமாக வீசுப்பட்டு காயமடைந்த எங்களை அங்கிருந்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர்” என்றார்.  இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.