38 இராஜாங்க அமைச்சுகள் செயலிழப்பு



கடந்த இரண்டு வருடங்களில் குறித்த இலக்கை நோக்கி பயணிக்காத 38 இராஜாங்க அமைச்சுக்கள் காணப்படுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளார்.
இந்த இராஜாங்க அமைச்சுக்களில், தேசிய மட்ட அமைச்சுக்கள் பல காணப்படுவதாகவும், இந்த அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கூட பயன்படுத்தப்படாதுள்ளதாகவும் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைக்கு குறித்த இராஜாங்க அமைச்சுக்களில் காணப்படும் செயலாளர்களின் செயற்திறன் இன்மையும் ஒரு காரணம் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் ஜப்பான் விஜயத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் அலரி மாளிகைக்கு அழைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத்திலுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகின்றது. சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், கட்சிக்காக பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டவர்களுக்கும் அதிகாரம் குறைந்த இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.