ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள்




அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனமும் அவுதிஸ்ரேலிய ரொட்டறிக்கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. 

அவுஸ்ரேலிய ரொட்டறிக்கழகத்தின் சர்வதேச மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு அங்கமாக 20 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வைத்தியசாலையில் நடைபெற்றது. 

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் செபரத்தினம் பிரான்சிஸ் அல்மேடா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியாவின் தமிழ்நாட்டின் ரொட்டறிக்கழகத்தின் நடராஜன் நாகோஜி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அக்கழகத்தின் முன்னாள் ஆளுனர் ஏ.சம்பத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத குளிரூட்டி, வைத்திய கழிவுகளை அகற்றும் கருவிகள், உடற்பரிசோதனை ஸ்கேன் இயந்திரம், இருதய பரிசோதனை செயற்பாட்டு இயந்திரங்கள் உட்பட பல்வேறு சிகிச்சை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் செபரத்தினம் பிரான்சிஸ் அல்மேடா தெரிவித்தார். 

இந்த வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதன் மூலம் தூர இடங்களுக்கு சிகிச்சைக்கு செல்வோர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலேயே பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதுவரை காலமும் குறித்த சிகிச்சைகளுக்காக அதிகளவான நோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே அனுப்பிவைக்கப்பட்டனர். இனிவரும் காலத்தில் இதனைக் குறைக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.