மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் புகையிரத கடவை ஊழியர்கள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் புகையிரத கடவை ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தங்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ‘நல்லாட்சியில் நல்ல அடிமைகள் நாங்கள், ‘அரசே! ஊழியர்களின் நியமனத்தை காலம் தாழ்த்தி அரசியல் இலாபம் தேடாதே!’, ‘நாள் ஒன்றுக்கு 250 ரூபா போதுமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கடந்த இரு வாரங்களாக வடக்கு, கிழக்கு மாகாண புகையிரத கடவை ஊழியர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 72 பேர் தற்காலிக அடிப்படையில் புகையிரத கடவை ஊழியர்களாக பணியாற்றிவரும் அதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.