அரசாங்கம் உரிய பதிலளிக்கும் வரை போராட்டம்



பெற்றோலிய தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தினால் நாடு பூராகவும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோக நடவடிக்கைகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க பதிலளிக்கும் வரை தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது இவ்வாறு இருக்க, துறைமுக அதிகார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று கூடி அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளதாக, துறைமுக பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றிய முன்னணியின் இணை அமைப்பாளர் சந்திரசிறி கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், இன்று பகல் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையின் போது, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமைச்சர் சந்திம வீரக்கெடி தெரிவித்துள்ளார். 

திருகோணமலையிலுள்ள எண்ணை தாங்கியை லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக குற்றம்சாட்டி இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கடந்த 2003ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எண்ணெய் தாங்கியின் நிர்வாகம் குறித்த நிறுவனத்தின் வசம் வழங்கப்பட்டதோடு, சட்ட சிக்கல் காரணமாக தற்போது அந்த உரிமை லங்கா இந்தியன் நிறுவனத்திடம் இல்லை என, தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தநிலையில், நாளை இந்தியா செல்லவுள்ள பிரதமர் திருகோணமலை எண்ணெய் தாங்கியை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாராகி வருவதாக, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.