‘மீதொட்டமுல்ல அபாய வலயம்’



கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது.
எனினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தன.
இந்நிலையில், அந்தக் குப்பை மலை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு அண்மித்த பகுதிகளை, தேசிய  கட்டட ஆராய்ச்சி நிலையம், அபாயகரமான பகுதிகளை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அவ்வலயத்துக்குள் உள்ளடங்கிய சுமார் 130 வீடுகளைச் சேர்ந்தோர். தற்காலிகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், சிலர் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட வலயம் தொடர்பில் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும என்பது தொடர்பிலான பரிந்துரைகள் விரைவில் முன்வைக்கப்படும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.
குப்பைமலையில் நிலச்சரிவு ஏற்படவில்லை என்றும், குப்பை மலையின் பாரத்தை நிலம் தாக்கிக்கொள்ளாமையால், வீடுகள் இருந்த பக்கம், நிலம் இழுத்துச்செல்லப்பட்டமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பண்டார மேலும் தெரிவித்துள்ளார். அதேபோல, நிலம் இழுத்துச்செல்லப்பட்டதுடன், மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமையில், இன்னுமின்னும் குப்பைகளை கொட்டினால், நிலைமை மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அந்த பிரதேசத்தில் இருந்த சிறிய,சிறய கான்கள் மூடப்பட்டுள்ளமையால், சிறியளவிலான, வெள்ளப்பெருக்கு நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது, நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையால், மீதொட்டமுல்ல பகுதியிலும் மழை பெய்யுமாயின், வெள்ளம் பெருக்கெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வனர்த்தத்துக்கு, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும்  கொழும்பு மாநகர சபை ஆகியனவே முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை, சம்பவத்தில் பலியான 27 பேர் தொடர்பில், திடீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசேகர, வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு நேற்று (16) உத்தரவிட்டிருந்தார்.
மீதொட்டமுல்ல, குப்பைமலையின் ஒருபகுதி, கடந்த 14ஆம் திகதியன்று சரிந்துவிழுந்ததில், குப்பைக்குள் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என, நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
ஸ்தலத்துக்கு விரைந்த நீதவான், மீட்கப்பட்ட சடலங்களை அவர்களின் உறவினர்களிடம் காண்பித்து, அடையாளம் காணப்பட்டதன் பின்னர், மரண பரிசோதனையை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் கட்டளையிட்டார்.
இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.