(AD)
வடக்கு, கிழக்கு மாணங்களில் எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக 61வது நாளாகவும், கிளிநொச்சியில் 65 நாளகவும் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 56 ஆவது நாளாக இடம்பெற்று வருவதுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 49 வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து ஜனாதிபதியினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கூறி மரிச்சிக்கட்டி பிரதேச மக்களும் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று 63வது நாளாகவும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாணங்களில் எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவை வழங்கும் அதேவேளை, பேரவை அதனை எற்பாடு செய்யவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஹர்த்தாலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று கூறிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பேச்சாளர் ஒருவர், இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு எற்பாடு செய்திருக்கலாம் என்று கூறினார்.
எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்யவில்லை என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கும் என்று கூறினார்.
எவ்வாறாயினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment