தலைநகர் என்றதும் சகல வசதிகளுடன் நிம்மதியான வாழ்கையை மக்கள் வாழ்கின்றனர் என்பதே பலருடைய எண்ணம்.
எனினும், பிரித்தானிய ஆட்சிக்காலம் தொட்டு அதே காணியில் வாழும் கொழும்பைச் சேர்ந்த மக்கள் சிலருக்கு காணி உறுதிப்பத்திரமோ, வீடுகளோ அற்ற நிலை காணப்படுகிறது.
கொழும்பு – 12, பெரடைஸ் பிளேஸ் என அனைவராலும் அறியப்பட்ட சொர்க்க பூமியில் பிரித்தானியர் ஆட்சிக்காலம் தொட்டு மக்கள் வாழந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் 25 குடும்பங்கள் மாத்திரமே வாழ்ந்த இந்த பகுதியில், நான்கு தலைமுறைகளின் பின்னர் தற்போது 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சலவைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த மக்களைக் கவனிப்பார் யாருமற்ற நிலை.
1931 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய அறைகளிலேயே தங்களின் வாழ்கையையும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து செயற்பாடுகளையும் இந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களுக்கான காணி உறுதிப்பத்திரமோ, சொந்த வீடுகளோ வழங்கப்படாத நிலையிலும் பெரடைஸ் பிளேஸ் மக்கள் மாநகர சபைக்கு வரி செலுத்தி வருகின்றனர்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் செலுத்திய அதே தொகை பணத்தையே தற்போதும் செலுத்துவதாக அம்மக்கள் குறிப்பிட்டனர்.
தாங்கள் சலவை செய்யும் இடத்தை சுவீகரித்து, அதில் சொந்த வீடுகளைக் கட்டித் தருவதாக கடந்த ஆட்சிக் காலத்தின்போது அரசாங்கம் வாக்குறுதி அளித்ததாக இம்மக்கள் சுட்டிக்காட்டினர்.
வாக்குறுதிக்கு அமைய இந்த மக்கள் தொழில் செய்யும் இடம் கையகப்படுத்தப்பட்டு, தொடர்மாடி வீடுகள் கட்டப்பட்டாலும் இரண்டு வருடங்களாகியும் அவற்றால் இவர்களுக்கு பயனேதும் கிட்டவில்லை.
வாக்குகளை மட்டும் பெறுவதற்கு தங்களின் ஊருக்குள் பிரவேசிக்கும் அரசியல்வாதிகள், அடுத்த தேர்தல் வரை காத்திருக்கின்றார்களா என்பதே பெரடைஸ் பிளேஸ் மக்களின் கேள்வியாக உள்ளது.

