சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்களின் நலன் கருதி இன்று (16) முதல் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தேவைகளுக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி பீ.எச்.ஆர்.டி சந்திரசிறி குறிப்பிட்டார்.
இதற்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக சபையின் தலைவர் எம்.பீ.ஏ ஹேமசந்திர நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.
இதேவேளை பயணிகளின் வசதி கருதி இன்றும் நாளையும் மேலதிக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம் இன்று காலை 11.30 க்கு கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி விசேட ரயிலொன்று பயணித்தது.
அத்துடன் நாளை (17) காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பிற்கு விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களத்தின் போக்குரவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை இரவு 8 மணியளவில் யாழப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
மேலும் மருதானையிலிருந்து காலி மற்றும் மாத்தறை பகுதிகளுக்கும் இன்றும் நாளையும் மேலதிகமாக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீ்ர்மானித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டில் இலாபமீட்டப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் 84 மில்லியனுக்கும் 86 மில்லியனுக்கும் இடைப்பட்ட வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று முன்தினம் (14) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment