நூற்றுக்கணக்கானோரின் திடீர் தாக்குதலில் இறைச்சிக் கூட உரிமையாளர் பலி



ராஜஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து தாக்கியதில் இறைச்சிக் கூட உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார். ராஜஸ்தான் மானிலத்தின் மேற்குப் பிரதேசமான அல்வாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பசுக்களும் மாடுகளும் இந்துக்களின் புனிதச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை இறைச்சிக்காக வெட்டுவதை இந்தியாவின் பல மானிலங்கள் தடை செய்துள்ளன.
இந்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த இறைச்சிக் கூட உரிமையாளரான பேலு கான் (55) என்பவர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வாகனத்தில் மாடுகள் சிலவற்றை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்தை ‘கௌ ரக்ஷக்’ என்ற பசுக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திடீரென்று சூழ்ந்துகொண்டனர். வாகனத்தை விட்டு பேலு கான் இறங்கியதும் அவர் மீது கண்மூடித்தனமாகத் தாக்கவும் தொடங்கினர். பேலு கானுக்கு ஆதரவாக வந்த மற்றும் சிலரையும் இந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
பேலு கான் சுய நினைவிழந்து விழுந்த பின்னரே அந்தக் கும்பல் கலைந்து சென்றது. இதன் பிறகு அங்கிருந்த சிலர் பேலு கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பேலு கான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.