ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை



அணுவாயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டு வருகின்ற நிலையில், வடகொரியா கடந்த 15 ஆம் திகதி பியோங்யோங் பகுதியில் சுமார் 2000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளது.
இந்த சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை ஏகமனதாக மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக வடகொரியாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஏவுகணை சோதனைகளுக்கு ஐ.நா.பாதுகாப்பு பேரவை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜாயி, இது குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக வடகொரியா அரசாங்கம் கூறியுள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகள் தொடர்பில் 2006 ஆம் ஆண்டில் ஐ.நா.பாதுகாப்பு சபை தனது முதலாவது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் வடகொரியா 5 அணுவாயுத சோதனைகளையும் இரண்டு நீண்ட தூர ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.