விமானப் படையின் மீட்பு நடவடிக்கை இன்றும்



நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது. 

கொக்கல இராணுவ முகாமில் இருந்து மூன்று ஹெலிகப்டர்கள் மீட்பு பணிகளில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கிகான் செனவிரத்ன கூறினார். 

இது தவிர றத்மலானை விமானப் படை முகாமில் இருந்து எம்.ஐ. 17 என்ற ஹெலிகப்டரும் தற்சமயம் மீட்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதென்று அவர் கூறினார். 

இதேவேளை நேற்றைய தினம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான விமானப் படை வீரர் உயிரிழந்துள்ளதாக கிகான் செனவிரத்ன கூறினார். 

காலி நெலுவ பிரதேசத்தில் விமானப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கேபிள் அருந்ததில் ஹெலிகப்டரில் இருந்து குறித்த விமானப்படை வீரர் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தார். 

பின்னர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கிகான் செனவிரத்ன கூறினார்.