ஊவா தமிழ் பாடசாலைகளில் வெற்றிடங்கள்



ஊவா மாகாணத்தில் உயர் தரத்தில் விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவில் கல்வி பயில்வதற்கு போதுமான வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு அநேகமான பெற்றோர் வாழ்க்கையில் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர்.
ஹப்புத்தளை – கல்கந்த பகுதியில் வசிக்கும் ஷாமிலா தேவி வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தாலும் ஹோட்டலில் வேலை செய்யும் தனது தாயின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நோக்குடன் பயின்று இம்முறை சாதாரணதரப் பரீட்சையில் 8A சித்திகளைப் பெற்றுள்ளார்.
தனது மகள் 8A சித்திகளைப் பெற்றாலும் அவளை ஒரு வைத்தியராக்க முடியாது என்ற ஏக்கம் ஷாமிலா தேவியின் பெற்றோரை இன்று அழ வைத்துள்ளது.
இவ்வாறு உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில்வதற்கு தகுதியான பல மாணவர்கள் ஊவா மாகாணத்தில் இருந்தாலும் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் தரத்தில் விஞ்ஞான, கணிதப் பிரிவில் கல்வி பயிலும் கனவுடன் இருந்தாலும் இன்று கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் கல்வி பயில்கின்றனர்.
ஊவா மாகாணத்தில் 205 தமிழ் மொழி மூல பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 30 முதல் 35 வரையான பாடசாலைகளில் உயர்தரம் கற்பிக்கப்படுகின்றது.
மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளில் மாத்திரமே உயர் தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவு செயற்பட்டு வந்தது.
அதிலும் தற்போது பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் மாத்திரமே விஞ்ஞான, கணிதப் பிரிவுகள் இயங்குவதாகவும் அதிலும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக மாகாண கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவிற்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.
பல பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்ட போதும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பாடங்களுக்கு அரசாங்கத்தினால் ஆசிரியர்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்தப் பகுதியின் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோரின் நிதியுதவியில் வெளியிடங்களில் இருந்து தொண்டர் ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டே கல்வி செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதுவரை காலமும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்று உயர் தரத்தைத் தொடர்ந்தாலும் 2015 ஆம் ஆண்டு வெளிமாவட்ட மாணவர்களுக்கு அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.
தமது மாகாணத்தில் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில சந்தர்ப்பம் இல்லாத இந்த மாணவர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டமைக்கு யார் பொறுப்புக் கூறுவது?
ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் 2016 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2554 மாணவர்கள் தோ்றறி 1391 மாணவர்கள் திறமையான முறையில் உயர் தரத்திற்கு சித்தியடைந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பதுளை மாவட்டத்தில் சரஸ்வதி தேசிய பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்துள்ளதாகவும் அங்கு அம்மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தமது பாடசாலையில் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளுக்கான நிரந்தர பட்டதாரி ஆசியர்கள் இல்லை என பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் அதிபர் நியூஸ்பெஸ்ட்டுக்குக் கூறினார்.
இதன் காரணமாக, உயர்தர விஞ்ஞானம், கணிதப் பிரிவு மாணவர்கள் பெருதும் சிரமப்படுவதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.