வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களை விடுமுறையில் அனுப்பும் நிபந்தனையை திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணங்கியுள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் ஓர் உத்தரவாதத்தை வழங்க முடியாத நிலையில் நீங்கள் இருப்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். இருப்பினும், சுதந்திரமான ஒரு விசாரணையில் குறுக்கீடு செய்யக் கூடாது என அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதாக நீங்கள் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தன்னுடைய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான நீதி விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்திருப்பதைப் போலவே யாழ் ஆயரும், நல்லை ஆதீன முதல்வரும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விசாரணையில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
அத்துடன், கூட்டமைப்பின் கூட்டாளி கட்சிகளின் தலைவர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவரும், அமைச்சர்களுடன் இந்த விடயத்தில் தமிழ் மக்களுடைய நலன்களைக் கருத்தில்கொண்டு, கலந்துரையாடுவதாக நேற்றிரவு (ஞாயிறு இரவு) தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு பொறுப்பேற்று இருப்பதன் அடிப்படையில், அமைச்சர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை நான் வலியுறுத்தப் போவதில்லை என விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment