ஒரு இனத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்



ஒரு மதத்திற்கு, ஒரு இனத்திற்கு எதிராக வெறுப்புக்களையும், வன்முறைகளையும் தூண்டுவோருக்கு எதிராக சட்ட ரீதியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை நேற்று (13) தீர்மானித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதியாக பதவியேற்றது, இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கே என்று அவர் கூறினார். 30 ஆண்டு காலமாக யுத்தத்தில் இருந்த நாம், அதன் பின்னர் இந்த நாட்டு மக்களை இணைத்துக் கொண்டு முனனோக்கி செல்ல தீர்மானித்தோம் என்றார். 

இன்று (14) பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறும் போது, 

நான் சிங்களவராக, பௌத்தனாக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன். அதேபோன்று இலங்கைய​னாக இருப்பதற்கும் பெருமைப்படுகின்றேன். நான் இலங்கையன் என்ற வகையில் அனைத்து மதம் மற்றும் கலாச்சாரத்ததை மதிக்கின்றேன். 

வேறு மதங்களையும் கலாச்சாரத்தையும் பார்த்து அதனை எதிர்ப்பதாக, வெறுப்பதாக இருந்தால் நாம் இலங்கையராக இருக்க முடியாது. அதனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலங்கையராக அமைதியாக வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாம் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். 

முஸ்லிம் வணக்கஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளளோம். 

எந்தவொரு மதத்தினருக்கோ இனத்தினருக்கோ எதிராக செயற்படுவதாக, வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் அவர்களை விசாரித்து அவர்களை கைது செய்து வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு கூறியுள்ளோம். அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிலரை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தியும் உள்ளோம். 

2014ம் ஆண்டு மத பேதத்தால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புக்களை நாம் அறிவோம். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டதை நாம் கண்டோம். நாம் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பு இல்லை. அந்த தேவையுமில்லை. அதற்கு மீண்டும் இடமளிக்க மோட்டோம். 

அதன் காரணமாக விஷேடமாக பொலிஸார் மற்றும் உரிய தரப்பினருக்கு, சட்டத்தையும் அமைதியையும் முறையாக நடைமுறைப்படுத்த கூறுகின்றோம். 

தேவையாயின் அதற்கு உரியவாறான புதிய சட்டங்களையும் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொள்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்