பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கவனயீர்ப்பு



பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார சங்கமும் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது. 

எமது உரிமைகளை புறக்கணிக்காதே என்னும் தலைப்பில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள பணிமனை வரையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு முன்பாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பதவி உயர்வினை வழங்கு, இடமாற்றத்தில் சலுகை காட்டாதே, பொதுச்சுகாதார நிர்வாகம் வைத்தியசாலை நிர்வாகமா?,பொதுச்சுகாதார சட்டங்களை நடைமுறைப்படுத்த தடையிடாதே, கூட்டங்களில் தரக்குறைவாக பேசாதே, உணவு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது முட்டுக்கட்டை போடாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஏந்தியிருந்ததுடன கோசங்களையும் எழுப்பினர். 

தமது நியாயமான கோரிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கை என்பதன் காரணமாக இரண்டு வாரங்களுக்குள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு இதற்கான தீர்வினை வழங்காவிட்டால் தாய்ச்சங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது