கந்தளாய் – போகஸ் சந்தியில் இடம்பெற்ற மோதலொன்றை அடிப்படையாக வைத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் வைத்தியசாலையிலுள்ள பொலிஸ் அலுவலகத்திற்குள் பிரவேசித்த சிலர் சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியுள்ளனர்.
மது போதையில் இருந்ததாகக் குற்றஞ்சுமத்தி கந்தளாய் போகஸ் சந்தியைச் சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (13) மாலை 6 மணியளவில் கந்தளாய் – போகஸ் சந்தியில் இருந்து, கந்தளாய் குளத்திற்கு மீன் கொள்வனவு செய்வதற்காக முச்சக்கரவண்டியில் சென்றிருந்த மூவருக்கு, சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நால்வர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அங்கு இடம்பெற்ற வாக்குவாதத்தின் பின்னர் முச்சக்கரவண்டி மீண்டும் போகஸ் சந்தி பகுதிக்கு பயணித்துள்ளதுடன், பின்னால் சென்ற சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த இளைஞர்களைத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் சிலர், சம்பவ இடத்திற்கு பின்னர் வருகை தந்துள்ளனர்.
இதனையடுத்து, தாக்கப்பட்ட இளைஞர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களது இரண்டு நண்பர்களும் கந்தளாய் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிவில் உடையில் இருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையின் பொலிஸ் அறையில் தங்கியுள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் அங்கு நுழைந்த பிரதேச மக்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மது போதையில் இருந்தார்களா என்பதனை ஆராயுமாறு வைத்தியரிடம் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், அவர்களது இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.


Post a Comment
Post a Comment