அமெரிக்கா வரும் விமானங்களில் லேப் டாப் தடை இல்லை





அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள், பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் மின்னணு உபகரணங்களை சோதிக்க 105 நாடுகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
விமான சேவை நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும், அல்லது அவ்விமானப் பயணிகளின் அனைத்து மின்னணு உபகரணங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்படும்.
அமெரிக்காவிற்குள் வருவதற்கு கூட அந்த விமான சேவை நிறுவனங்களுக்கு உரிமை மறுக்கப்படலாம்.
`` சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்; வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டு வருவது, விமான நிறுவனங்களில் பணி புரியும் ஆட்களையே பயன்படுத்துவது, மற்றும் விமானத்தை கடத்துவது போன்ற வேலைகளுக்காக புதிய வழி முறைகளை நமது எதிரிகள் கண்டுபிடிக்க தொடர்ந்து வேலை செய்கின்றனர்,'' என்று புதன்கிழமை புதிய நடவடிக்கைகளை வெளியிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி தெரிவித்தார்.
''ஒவ்வொரு புதிய அச்சுறுத்தல் வரும்போதும் அதை தற்காலிகமான தீர்வுகளை கொண்டு நிறுத்துவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது. இதற்கு பதிலாக, பயணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, புதிய நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதை கடினமாக்கும் புதிய நடவடிக்கைகளையும் அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
இந்த புதிய நடவடிக்கைகள் மட்டுமே இறுதியாக இருக்காது என்று கூறிய கெல்லி வெளியிட்ட நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்:
பயணிகளை சோதனை செய்வதற்கன மேம்பட்ட வசதிகள்
தனிப்பட்ட மின்னணு சாதனங்களைக் கண்காணிக்கும் மேம்பட்ட வசதி
விமானம் மற்றும் பயணிகள் பகுதிகளில் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள்