அடுத்த கட்டக் கடன்



சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியாக, இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 
குறித்த கடனானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.   
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், கடந்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி, 36 மாத காலத்தில் (3 வருடங்கள்) 1.5 பில்லியன் (1,500 மில்.) அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கிகாரம் வழங்கியிருந்தது.  
அந்தவகையில்,  முதற்கட்டமாக கடந்த வருடம் நவம்பர் 18 ஆம் திகதி 162.6 மில்லின் அமெரிக்க டொலர் கடனை, சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கியிருந்தது.  
இலங்கையை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் குறித்த கடன் வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   
மேலும் இக்கடன் உதவி, 3 வருடத்தில், 6 கட்டங்களாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
இலங்கை அரசாங்கம், 1.5 தொடக்கம் 2 பில்லியன் அமெரிக்க​ டொலர்களை, நாட்டின் பொருளதார மீட்சிக்கான உதவியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்ப்பார்த்துள்ளதோடு, அதனை இரு தரப்பு மற்றும் பல்தரப்பு கடன் திட்டங்கள் மூலம், சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக உறுதியளித்திருந்தது.  
குறித்த கடன் உதவியை பெறுவதற்கு, இலங்கையானது,   
 (I) நிதி ஒருங்கிணைப்பு, (I I) வருவாய் திரட்டல்,   
(I I I) பொது நிதி நிர்வாக சீர்திருத்தம், (Iv) அரச நிறுவன சீர்திருத்தம், (V) நெகிழ்வான பணவீக்க வீதத்தின் கீழ் நெகிழ்வான பணவீக்க இலக்குகளை மாற்றுவது,   
(V I) வர்த்தக மற்றும் முதலீட்டில் சீர்திருத்தங்கள். ஆகிய கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.