நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோத்தபாய: யுத்தம் குறித்து கற்பிப்பதற்கு அனுபவம் இருக்கிறதா?



யுத்தத்தினை தாமே வெற்றி கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்வதற்கில்லை என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
யுத்தத்தினை வெற்றி கொண்டது தான் என்றும், ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் என்னைச் சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ச இன்று ஊடகங்களுக்கு கூறுகின்றார்.
அவர் யுத்தத்தினை வெற்றி கொண்டார் என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
15 வருடங்களாக கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டிலிருந்ததால் அவருக்கு நாட்டில் அரசியலமைப்பொன்று இருந்ததா என்பது தெரியாது.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவையும், அமெரிக்க அரசியலைப்பினையும் பாதுகாப்பதாக பைபிளின் மேல் கைவைத்து சத்தியம் செய்தவர்.
எனவே அவருக்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு குறித்தும் அரசியல் குறித்தும் கதைப்பதற்கு உரிமையில்லை.
எங்களுக்கு யுத்தம் குறித்து கற்பிப்பதற்கு அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. 15 வருடங்கள் தப்பிச் சென்றுவிட்டு நாட்டுக்கு வந்தமையினால் யுத்தத்தினை வெற்றி கொண்டதாக காட்ட முயற்சிக்கின்றார்.
ஆனாலும் கொழும்பிற்கு வந்த அவர் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தார்.
கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதிகள், இராணுவ தளபதிகள் முடிந்தளவு நாட்டிற்கு சேவையாற்றியதாகவும் யுத்தத்திற்காக கோத்தபாய ராஜபக்‌ச என்ன செய்தார் என்பது அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.
அவர் தவறிழைத்திருந்தால் நாட்டில் ஏனையவர்கள் எதிர்கொள்ளும் சட்டத்தினையே அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.