இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடனான பயணம் சுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
இலங்கை பயணம்
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் வருகிற 26–ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு சென்றது.
விராட்கோலி பேட்டி
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நாங்கள் 3 ஆண்டுகள் (2014–2016) ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருக்கிறோம். எனவே எங்களுக்குள் நிச்சயம் நல்ல புரிந்துணர்வு இருக்கும். இதனை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தற்போதைய சூழ்நிலையில் புதிய பயிற்சியாளர் மற்றும் உதவி பணியாளர்கள் குறித்து புதிதாக எதுவும் நான் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். எங்களுக்குள்ளான எதிர்பார்ப்பு என்ன என்பது தெரியும். எனவே புதிதாக அறிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
நிறைய யூகங்கள், பல விஷயங்கள் எங்களை சுற்றி வலம் வந்தன. அவை எல்லாம் எனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விஷயம் அல்ல. எனது பணி என்னவென்றால் களத்தில் இறங்கி அணி நிர்வாகத்துடன் இணைந்து சிறந்த அணியை உருவாக்குவது தான். திறமையை வெளிப்படுத்துவதில் மட்டுமே நான் நம்பிக்கை கொண்டு இருக்கிறேன். கடந்த சில வாரங்களில் நடந்த சம்பவங்களினால் கூடுதல் நெருக்கடி எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். வெளிஉலகில் நடப்பதை பொருட்படுத்த தேவையில்லை என்பதை நம்புகிறேன்.
விமர்சனம் புதிதல்ல
ஒரு அணியாக நாங்கள் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சாதிக்க நினைத்து செயல்படுகையில் பலருக்கு கடந்த காலங்களிலும் கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. விமர்சனம் ஒன்றும் புதிய விஷயமல்ல. எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டு இருப்பதால் நிச்சயமாக நான் கூடுதலாக நெருக்கடி எதனையும் எடுத்து கொள்ளமாட்டேன். கேப்டனுக்கு உரிய பொறுப்பை உணர்ந்து வருங்காலங்களிலும் சிறப்பாக செயல்படுவேன். வெளியில் நடக்கும் விஷயங்களை பொருட்படுத்தாமல் மனநிலையை சரியான முறையில் இருக்கும் படி பார்த்து கொண்டால் தான் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும்.
கடந்த ஆண்டு இலங்கை தொடரை 2–1 என்ற கணக்கில் வென்று அன்னிய மண்ணில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோம். அதை விட தற்போது எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த போட்டி தொடரையும் வெல்வோம்.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.
ரவிசாஸ்திரி கருத்து
கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்பிளே விலகியதை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு முதல் பயணமாக இலங்கை செல்லும் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கடந்த ஆண்டு இலங்கைக்கு சென்றதை காட்டிலும் தற்போது நான் முதிர்ச்சி கண்டுள்ளேன். கடந்த 2 வாரங்களில் நான் அதிகம் முதிர்ச்சி கண்டு இருப்பதாக உணருகிறேன். கடந்த 3 வருடங்களாக நமது அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த புகழுக்கு எல்லாம் தகுதியானவர்கள் வீரர்கள் தான். பயிற்சியாளராக யாரும் வரலாம், போகலாம். தற்போது இந்திய டெஸ்ட் அணி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இதற்கு வீரர்களின் சிறப்பான முயற்சியே காரணமாகும்.
பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கடந்த 15 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரது பயிற்சியில் இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக மேம்பட்டு இருக்கிறது. கேப்டனுக்கும், பயிற்சியாளர்களுக்கான உறவு குறித்து வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் என்ற இரு கோணங்களில் நான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. விளையாடும் போது வீரர்களது கவனம் சிறிதளவும் சிதறக்கூடாது. அப்போது தான் பயிற்சியாளர்களுடன் எல்லா தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். கேப்டனின் பொறுப்பு என்னவென்றால் போட்டியில் சிறப்பாக செயல்படும் வகையில் எல்லா வீரர்களின் மன ஓட்டத்தையும் கொண்டு வர வேண்டியதாகும். பயிற்சியாளரின் பணி என்பது நன்றாக பயிற்சி அளிப்பது மட்டும் தான்.


Post a Comment
Post a Comment