அம்பாரை ஹாடி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது



அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த நிறுவனம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதியில் இருந்த இரண்டாம் வருட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மாணவக் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

அன்று முதல் இன்று வரை குறித்த நிறுவனம் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதோடு, இன்று காலை விடுதியிலுள்ள மாணவர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். 

இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், மாணவர்கள் மற்றும் அரச சொத்துக்களின் பாதுகாப்பு கருதி, மறு அறிவித்தல் வரை, ஹாடி தொழிநுட்ப நிறுவனம் மூடப்படுவதாக, அதன் பணிப்பாளர் ஆதம் பாவா பாரோன் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், விடுதியிலுள்ள மாணவர்களை வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நிறுவனம் மீளத் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.