இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 600, இலங்கை 291 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்,
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (76)
அவுட்டாகாமல் இருந்தார்.
கோஹ்லி சதம்:
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கோஹ்லி, ரகானே
இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக செயல்பட்ட கோஹ்லி,
டெஸ்ட் அரங்கில் 17வது சதம் அடித்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில்
3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. கோஹ்லி (103), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.
இமாலய இலக்கு:
பின், 550 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி
இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஷமி 'வேகத்தில்' தரங்கா (10) ஆட்டமிழந்தார்.
குணதிலகா (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். ஜடேஜா 'சுழலில்' குசல் மெண்டிஸ் (36), மாத்யூஸ் (2) சிக்கினர்.
கருணாரத்னே, டிக்வெல்லா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
அஷ்வின் 'சுழலில்' டிக்வெல்லா (67) அவுட்டானார். கருணாரத்னே 97 ரன்களில் ஆட்டமிழந்தார். நுவன் பிரதீப்,
லகிரு டக்-அவுட்டாகினர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.
குணரத்னே, கேப்டன் ஹெராத் காயம் காரணமாக 'பேட்டிங்' செய்ய வரவில்லை. இதையடுத்து
இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக
அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட்
ஆகஸ்ட் 3ல் கொழும்புவில் துவங்குகிறது.


Post a Comment
Post a Comment