(க.கிஷாந்தன்)
இலங்கை 1974ம் ஆண்டு சுதந்திர பெற்ற போதும் மலையகம் 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் தான் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன் எம் மக்களிடம் வாக்குரிமை இருக்கவில்லை. எவரும் அரச துறையில் பணியாற்றவில்லை. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிகாலத்தில் தான் மலையக மக்களுக்கு அதிகமான சுதந்திரமும் வரப்பிரசாதங்களும் கிடைத்தது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருடகால தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் 06.08.2017 அன்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் மலையகத்தில் பலருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ரணில் விக்ரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருக்கும் போது தான் சீடா நிறுவனம் மலையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்தோடு ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியும் ஐக்கிய தேசிய கட்சி காலத்தின் தான் கொண்டு வரப்பட்டன. இன்று கிறிஸ்தவ, இந்து, மூஸ்லீம் ஆகிய கலாச்சார அமைச்சுகள் உருவாக்கப்பட்டது என்றால் அது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் தான். இந்த நாட்டில் இன மத மொழி பேதங்கள் இல்லாமல் சுதந்திரமாக பயமின்றி நாம் வாழ்கின்றோம் என்றால் அது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் என்றால் மிகையாகாது.
எனவே மலையக மக்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்றால் மலையக மக்கள் என்று ஒரு போதும் பிரிக்க முடியாத அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளன. இன்று மலையகத்திற்கு என பல சேவைகளை ஆற்றிய ஐக்கிய தேசிய கட்சியையும், ரணில் விக்ரமசிங்க அவர்களையும் ஒருபோதும் மறந்துவிட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment