குகுலே கங்கை,லக்சபான வான் கதவுகள் திறப்பு



நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லக்ஸபான, குகுலே கங்கையின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதனால், ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

அதன்படி பலிந்தநுவர, இங்கிரிய, புளத்சிங்கள, மதுருவெல, அகலவத்தை, பதுரலிய, மதுராவல மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த தாழ்வான பிரதேசங்களில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக போக்குவரத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிமான மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு மற்றும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். 

அதேவேளை நில்வளா கங்கை, ஜின் கங்கை, களனி கங்கை ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.