கத்தார் வாழ் இலங்கையர்களினால் ஜனாதிபதிக்கு பாராட்டு



நேர்மையான, எளிமையான அரச தலைவராக விளங்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை இன்று சரியான பாதையில் பயணிப்பதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் தெரிவித்தனர்.

கட்டாருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் டோஹா நகரில் இடம்பெற்றபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெருந்திரளான இலங்கையர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். ஜனாதிபதிக்கு இதன்போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சிறுவர் சிறுமியர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்ள நேரிட்டாலும் சுபீட்சம் மிக்க சிறந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகம், சுதந்திரம் காரணமாக சிலர் இணையத்தினூடாகவும்
வலைத்தளங்களின் ஊடாகவும் மிகவும் தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றமை பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இணையத்தினூடாக காணும் இலங்கை தேசத்தின் நிலை உண்மையான நிலைக்கு முற்றிலும் வேறுபட்டதாகும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டில் தரமான அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நல்லாட்சிக் கோட்பாடுகளின் கீழ் சமூக, பொருளாதார மாற்றங்கள் பலவும் ஏற்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
கட்டாருக்கான தமது அரச முறை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்படும் புதிய ஒப்பந்தங்களினூடாக நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் பணிபுரியும், மத்திய கிழக்கில் வசிக்கும் சகல இலங்கையர்களும் தாய் நாட்டிற்கு வழங்கும் கௌரவத்திற்காக ஜனாதிபதி இதன்போது பாராட்டு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான முதலாவது அரச துறை விஜயமாக கட்டார் நாட்டிற்கு வருகை தந்ததையிட்டு அங்கு வாழும் இலங்கையர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.