அட்டாளைச்சேனையில் ஆரம்பக் கல்வியில் வீழ்ச்சி?



(உண்மையாளன்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக ஆரம்பப் பிரிவு மற்றும் ஏனைய பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதால் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குற்பட்ட அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, ஆலம்குளம், சம்புநகர், முல்லைத்தீவு, அஷ்ரப் நகர் போன்ற கிராமங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவு காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வியை தொடரும் மாணவர்களது தொகை: 10530, 01/2016 இலக்க சுற்றிக்கையின் படி அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகை: 189, தற்போது சேவையிலுள்ள ஆசிரியர்களின் தொகை: 133 ஆகும். இதற்மைவாக 56 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இந்த ஆசிரியர் பற்றாக்குறை கடந்த மூன்று வருடங்களாக நிவர்த்தி செய்யப்படாமல் மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் பராமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப் படுகின்றது.
கடந்த காலங்களில் புதியதாக நியமனம் வழங்கப்பட்ட தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் கூட அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளுக்கு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததினாலேயே ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் அட்டாளைச்சேனை கோட்டம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும், இதற்கு உதாரணம் இந்த வருட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் அட்டாளைச்சேனை கல்வி கோட்டப் பாடசாலைகளின் பெறுபேறுகளாகும் எனவும் கவலை தெரிவிக்கப் படுகின்றது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2014 இல்: 91 மாணவர்கள், 2015 இல்: 91 மாணவர்கள், 2016 இல்: 67 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் (2017) ஒப்பிட்டுப் பார்க்கையில் 24 மாணவர்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அட்டாளைச்சேனை கோட்டத்தின் ஆரம்பக் கல்வியில் பாரிய வீழ்ச்சியினை காட்டுகின்றது.
இவ்வாரான பாரிய வீழ்ச்சிக்கு யார் காரணம்? மாகாண கல்வி அமைச்சா? மாகாண கல்வித் திணக்களமா? அல்லது வலயக் கல்வி அலுவலகமா? என பாடசாலை சமூகம், புத்தி ஜீவிகள், கல்வி மான்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாண சபையின் அரசியல் (கலைக்கப்பட்ட மாகாண சபை) அதிகாரம் முடிந்த மறு கணமே இவ்வாரான கல்வி துறையில் பழிவாங்கல் நடவடிக்கை இடம்பெறுவது வேதனையான விடயமாகும் என அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள மாணவர்களின் எதிர்கால கல்வியினை கருத்தில் கொண்டு இவ்விடயத்தில் சாதகமன, தீர்க்கமான முடிவுளை மேற்கொண்டு கல்வியினை வழங்கி சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்குவதற்கு மாகாணப் கல்விப் பணிப்பார் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் இருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.