சிறுமியை மோதிய கென்டர் வாகனம் சேதமாக்கப்பட்டது



(மட்டக்களப்பு நிருபர் கிருஸ்ணகுமார்)


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் சிறுமி ஒருவரை மோதியதன் காரணமாக படுகாயமடைந்த நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது, பிரதேச மக்களினால் கன்டர் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிரங்குடா பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்ற 12 வயது சிறுமியை மண் ஏற்றி வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த சிறுமி வவுணதீவு மண்டபத்தடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

விபத்தினை தொடர்ந்து பிரதேச மக்களினால் விபத்தினை ஏற்படுத்திய கன்டர் வாகனம் தாக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்போது, பொலிஸாருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. 

அதன்பின்னர், பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

(மட்டக்களப்பு நிருபர் கிருஸ்ணகுமார்)