3வது ​போட்டியிலும் வெற்றி இந்தியாவுக்கே



இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. 

மும்பையில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி, களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல ஒற்றை ஓட்டத்துடனும் உபுல் தரங்க 11 ஓட்டங்களுடனும் வெளியேற, அடுத்ததாக வந்த குஷல் பெரேரா 4 ஓட்டங்களையும், சமரவிக்ரம 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர். 

இந்தநிலையில் அஷெல குணரத்ன ஓரளவு நிதானமாக ஆடிய போதும் 36 ஓட்டங்களைப் பெற்ற வேளை அவரும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

இதனையடுத்து களத்திற்கு வந்த தனுஷ்க குணரத்ன (3), திஷர பெரேரா (11) ஆகிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலஙகை 135 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய உனத்கட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதற்கமைய 136 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்தியாவுக்கு, ஆரம்ப வீரரான ரோகித் சர்மா 27 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றுக் கொடுத்தனர். 

அடுத்ததாக வந்த, ஸ்ரேயாஸ் அய்யர் மனிஷ் பாண்ட்யா ஆகியோர் நிதானமாக ஆடி, இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தனர். எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அய்யர் 30 ஓட்டங்களுடன் வெளியேற மனிஷூம் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (4) ஆட்டமிழக்க, தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி இணைந்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். 

இதற்கமைய, 4 பந்துகள் மீதமிருக்க 19.2 ஓவர்களில் 139 ஓட்டங்களை குவித்த இந்தியா வெற்றியை ருசித்தது. 

தோனி 16 ஓட்டங்களுடனும் கார்த்திக் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 

எனவே மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு இருபது தொடர் 3-0 என இந்தியா வசமாகியுள்ளது.