பழவகை உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை



இலங்கையின் பிரதான பழவகைகளின் உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் பெறுமதி சேர்த்து விருத்தி செய்தல், வணிகமயமாக்கலுக்காக தொழில்நுட்ப உதவியினை பெற்றுக் கொள்ளல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

வாழை, அன்னாசி, மாம்பழம் ஆகிய பழவகைகளை இலக்காகக் கொண்டு, அதன் உற்பத்தி, தரம் மற்றும் பலன் என்பவற்றை அதிகரிப்பதற்கும், பெறுமதி சேர்ப்பதனை விருத்தி செய்வதற்கும், பழவகை பூங்காக்கள் மற்றும் தயாரிப்பு நிலையங்களுக்காக முதலீடுகளை கவர்ந்து கொள்வதற்கு ஏதுவான வகையில் அரச-தனியார் இணை செயன்முறையினை விருத்தி செய்வதற்குமான, வேலைத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு, தொழில்நுட்ப உதவியினை பெற்றுக் கொடுக்க சீன குடியரசின் தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு (South – South Cooperarion) அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. 

இதனடிப்படையில், வாழை, அன்னாசி மற்றும் மாம்பழம் ஆகிய பழங்கள் தொடர்பிலான வேறுபட்ட மூன்று வேலைத்திட்டங்கள் வெவ்வேறு மாவட்டங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

விவசாயத்துறைக்கு பாரிய பங்களிப்பினை செலுத்துகின்ற மேற்கூறப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கம், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.