கிராமங்களையும் நகரங்களையும் கட்டியெழுப்ப, ஊழல் மோசடிகளை நிறுத்த வேண்டும் என்பதுடன், இத்தகைய ஊழல் மோசடிகளை நிறுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் தம்வசமே இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கோட்டை மாநகர சபையை கட்டியெழுப்புவது தொடர்பான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வில் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிராமங்களையும் நகரங்களையும் கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறு தேர்தல் பிரசாரங்களில் பல கட்சிகள் கோஷமிடுகின்றன. பெரும்பாலான கட்சிகளில் இருப்பவர்கள் ஊழல் மேசடிகளில் ஈடுபட்டவர்களும் அதற்குத் துணை போகின்றவர்களும் ஆவர். அது மடடுமல்லாது, ஒரு சிலர் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக கட்சித் தாவும் கொள்கையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
கிராமங்களையும், நகரங்களையும் கட்டியெழுப்புவதற்கான சக்தியும், ஆற்றலும் எமது கட்சிக்கே இருக்கிறது. சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கட்டியெழுப்புவது தொடர்பான சரியான வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் சில வேலைத்திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் கட்சி சார்பில் ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர்களே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதாக கூறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம் திருடர்களை காப்பாற்றி வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment