அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில்



(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி வீழ்ந்ததில் 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி குடியிருப்பு மீது வீழ்ந்ததில் குடியிருப்பின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டன் பிரதேசத்திலிருந்து அக்கரப்பத்தனை கல்மதுர தோட்டத்திற்கு சென்றபோதே 28.01.2018 அன்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் சிறுமி ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ளவர்களுக்கு உடமைகள் சேதம் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.