முதுபெரும் ஒலிபரப்பாளர் வி.ஏ.திருஞானசுந்தரத்தின் இறுதிக் கிரியைகள்



மூத்த ஒலிபரப்பாளர் வி.ஏ.திருஞானசுந்தரத்தின் இறுதிக் கிரியைகள் இன்று கல்கிசை இந்து மயானத்தில் இடம் பெறுகின்றது.
எப்போதும் " மகன்!மகன்! " என்று அனைவரையும் அன்பொழுக அழைத்த அவர் கருணையும், கண்டிப்பும் கலந்த ஒரு நேர்த்தியான நிர்வாகி! 1962ல் இலங்கை வானொலியில் ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து தமது பல்வேறு திறமைகளால் உயர் பதவிகள் பல வகித்த 
அவரிடம் 1979ல் புதிதாய்ச் சேர்ந்து அவரது மேற்பார்வையில் அறிவிப்புப்பயிற்சி பெற்ற நாட்களை மறக்க முடியாது! எனக்கு முழுமையான சுதந்திரம் தந்து அறிவிப்புகளைச் செய்ய விட்டு ஏதாவது தவறுவிட்டால் மீண்டும் அப்பிழை நேராவண்ணம் திருத்துவார்! பிற்காலத்தில் அவர் உயர்பதவிகள் வகிக்கும் போதும்
அந்த நேசம் மறையவில்லை!
1937.12.01 அன்று துன்னாலையில் பிறந்த அவர் கரணவாய் கிராமத்தில் வளர்ந்தவர்!
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்றபின் இரத்மலானை இந்துக் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்!
1957 முதல் 1960வரை " வீரகேசரி " உதவி
ஆசிரியராக இருந்த அவர் அதில் 'வனிதையர் அரங்கம் ' என்ற பகுதியை
'மரகதம் ' என்ற புனைபெயரிலும், 'கலை அரங்கம் ' என்ற பகுதியை ' கலைமதி 'என்ற
புனைபெயரிலும் எழுதி வந்தார்!
1961 முதல் 1980 வரை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் முழு நேர உத்தியோகத்தராக மொழி பெயர்ப்பாளர்,நிர்வாக அதிகாரி,பிரசாரப்
பொறுப்பதிகாரி பதவிகளை வகித்தவர்
அவர்!
1962ல் பகுதி நேர அறிவிப்பாளராக ஆனதில் இருந்தே வானொலிக்கென ஏராளமான பிரதிகள் எழுதிய அவர் ' நாளைய சந்ததி ',
'எமது அதிதி ', 'வளரும் பயிர் ' , 'கலைக்கோலம் ', 'கண்டதும் கேட்டதும்- செய்திச்சுருள் ' மற்றும் இசைச்சித்திரங்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கினார்! ஆரம்ப காலத்தில் செய்திகளை மொழிபெயர்த்து வாசித்த அறிவிப்பாளர்களில் இவரும் ஒருவர்!
1980ல் இலங்கை வானொலியில் முழுநேர
உதவி நிர்வாகப் பணிப்பாளராகி, பின்னர் வர்த்தக சேவையின் மேலதிகப் பணிப்பாளராகி,அதையடுத்து மேலதிக தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் ஆகவும்,
தொடர்ந்து தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகவும் உயர் பதவிகள் பல வகித்த அவர் 1997 டிசம்பர் மாதம் ஒய்வு பெற்ற பின்னரும் கூட சுயாதீனத் தொலைக்காட்சி, ரூபவாஹினி பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், இலங்கை வானொலி ஆலோசகராகவும் கடமை புரிந்திருக்கிறார்! சூரியன், சுவர்ணவாகினி தனியார் வானொலிகளுக்கும் பங்களிப்பு நல்கினார்!
வானொலியில் பணியாற்றியபோது ஜப்பான்,ஜெர்மனி ,மலேசியா,சிங்கப்பூர்
நாடுகளில் துறைசார் பயிற்சி பெற்ற அவர் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளின் போது விரிவுரைகள் நிகழ்த்தியவர்!
கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் பங்களிப்பு
நல்கினார்!
அவர் பெற்ற பட்டங்கள் ஏராளம்! ஸ்ரீலங்கா திலக, கலைச்செம்மல்,தமிழ் ஒளி,'ஒலிஅரசு ,
கலைஞானபானு, மதுரபாஷகர், தேசாமிர்தன் அவற்றில் சில!
தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக அவர் இருந்தபோது ஏராளமான புதியவர்களுக்கு
வானொலியில் தம் திறமை காட்ட வாசல் திறந்து வாய்ப்பளித்தார்! நிகழ்ச்சிகள் தரம் தாழ்ந்து விடாமல் கண்காணித்தார்! சகலரோடும் அனுசரித்து நடக்கக் கூடியவராக இருந்ததால் பலவிதசாதனைகள் ஊடாக
தமிழ்ச் சேவை வளம் பெறச் செய்தார்!
இலங்கை வானொலி வரலாற்றில் அழியா இடம் பிடித்த - அனைவரும் " திரு " என்று அன்பாய் அழைத்து வந்த- திரு. வீ.ஏ.திருஞான சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தாலும் அவர் புகழ் நாமம்
மறையாது!
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!