தந்தை அடித்து மகன் கொலை இருவர் கைது



(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் 08.03.2018 அன்று இரவு 8.00 மணியளவில் தந்தை ஒருவர் மகனை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மது போதையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே மகன் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தினந்தோரும் மது அருந்திவிட்டு சண்டையிடுவதாகவும் 08.03.2018 அன்றைய தினம் சண்டை உக்கிரமடைந்த நிலையிலேயே இவர் உயிரிழந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆறுமுகன் சிவசூரியன் வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்