பௌத்த பிக்கு ஒருவர் உட்பட 10 மாணவர்கள் கைது



எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

பிக்கு மாணவர் ஒருவருடன் சேர்த்து மேலும் 09 மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை தோற்றுவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உட்பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

2016/2017 ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பௌத்த சமயம் மற்றும் பௌத்த ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.