பாராட்டு



(க.கிஷாந்தன்)
தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத்திறமைகளை ஊக்கப்படுத்துவதற்கு இளைஞர் குழுக்கள் முன்வருகின்றமை வரவேற்கதக்கதாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தலவாக்கலை பார்ம் ஒருமித்த அமைப்பினால் கொட்டகலை ஸ்ட்ரேலிங் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பார்ம் ஒருமித்த அமைப்பின் தலைவர் ஜெகனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் ராஜா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலவாக்கலை இணைப்பாளர்கள் கிரே, தமிழ்ச்செல்வன், மக்கள் தொடர்பு அதிகாரி ராமகிருஷ்ணன் உட்பட கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.
மத்திய மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
'மலையகப்பகுதிகளில் படித்து விட்டு வெளியிடங்களில் பல்வேறு நிறுவனங்களில் தொழில் புரிகின்ற இளைஞர்கள் அமைப்பு ரீதியாக செயற்பட்டு தமது பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத்திறமைகளை ஊக்கப்படுத்துவதற்கு விளையாட்டுப்போட்டிகளை நடத்துகின்றமை வரவேற்க தக்க விடயமாகும்.
இவ்வாறு ஸ்ரேலிங் தோட்டத்தில் இடம் பெறுகின்ற இந்தக்கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு என்னை அதிதியாக அழைப்பதற்கு தெரிவு செய்த தலவாக்கலை பார்ம் ஒருமித்த அமைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நிலையில் இந்த இளைஞர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரேலிங் தோட்ட மைதான அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.