வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு



சிநேகபூர்வ ரக்பி போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகை தந்து, சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெட் தோமஸ் ரீட் என்ற வீரர் சற்றுமுன்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிரித்தானியாவை சேர்ந்த 27 வயதான ரக்பி வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, பிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) உயிரிழந்தார்.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையே அவரின் உயிரிழப்புக்கு காரணமென கண்டறியப்பட்டது.
குறித்த வீரரின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது.
உயிரிழப்பு தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.