முள்ளி வாய்க்கால் தினம்



இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் எதிர்வரும் வருடங்களில் உள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று (18) மாலை நடைபெற்றது. 

கடந்த பல வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம் உட்பட பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)