மூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்



மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கல்முருவ பிரதேசத்தில் சில குடும்பங்கள் வௌ்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாதம்பே பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் குழுவொன்று அந்தப் பிரதேசத்திற்கு சென்றுள்ளது. 

இதன்போது நீரில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வௌ்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.