ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை இலங்கையில்



அமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் மே 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த முதலாவது சத்திர சிகிச்சையின் போது பித்தப்பை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையர் ஒருவருக்கு டாவின்சி XI ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டுள்ளது.

´சர்வதேச மருத்து துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டு சேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்´ என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் குறிப்பிட்டார். 

´கப்பலொன்றில் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும்´ என்று மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார். 

மேலும் ´இது மிகவும் ஸ்திரமாகவும் நகராமலும் இருக்கிறது. வைத்தியசாலை ஒன்றிலுள்ள சத்திர சிகிச்சை கூடமொன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதைப் போன்ற உணர்வை எனக்கு தந்தது. வைத்தியசாலை கப்பலொன்றில் சத்திரசிகிச்சை செய்ய கிடைத்த இந்த வாய்ப்பானது அற்புதமான அனுபவமான இருந்ததுடன், நானும் எனது அணியினரும் இதை ஒருபோதும் மறக்கமாட்டோம்´ என்றும் அவர் கூறினார். 

கடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையான ஒன்றாகவும் அமைந்திருந்தது. சத்திர சிகிச்சையின் வெற்றிகரமான முடிவின் பின்னர் நோயாளி, மேர்சி கப்பலின் மயக்க மருந்து பின் பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் வைத்தியர் வரணிதரனின் சத்திர சிகிச்சைக்கு பின்னரான வழக்கமான மருத்துவ கண்காணிப்புகளின் நிமித்தம் நோயாளி மிகச் சிறந்த உடல் நலத்துடன் கப்பலில் இருந்து வெளியேறிச் சென்றார்.