தவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம்



தவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவின், ´சமர்ப்பிக்கும் திறன்கள்´ மற்றும் ´பயனுள்ள அரசாங்க நிறுவனங்கள்´ என்ற இரண்டு நூல்களை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், ´விளையாடும் காலத்தில் நான் அணித் தலைவனாக இருந்தேன். ஒருவரை தலைவராக்க நிறையபேர் பாடுபட்டனர். நாங்களும் கஷ்டப்பட்டு தலைவர்களை உருவாக்கினோம். ஆனால் அந்த தலைவர்களின் பெயர்கள் இன்று கெடுவதற்கு காரணம் கடந்த காலத்தில் களவு சூது செய்த நபர்களினால். 

அங்கு தான் தலைவர்களின் நிலை கீழ் செல்கின்றது. அந்த நிலையை எம்மால் பார்க்கமுடிகிறது. அமைச்சர் என்ற வகையில் நாங்களும் தவறான நபர்களை எம்மிடையே வைத்திருந்தால் எமது மேல் நிலை இல்லாமல் போய்விடும். கஷ்டப்பட்டு நாம் தலைவர்களை உருவாக்கினாலும் அதற்காக பாடுபட்டவர்கள் அந்தத் தலைவர்களை அழிப்பதில்லை. 

கஷ்டப்பட்டு நாங்கள் தலைவர்களை உருவாக்கி நல்ல நிலைக்கு கொண்டுவந்தாலும் களவு சூது கொண்ட நபர்களினால் அந்த தலைவர்களை அழித்துவிடுகின்றனர். எனது செயலாளர் உபாலி மாரசிங்க சொன்னார் பெப்ரவரி மாதம் தான் ஓய்வு பெறபோவதாக. அதுவரை அவரும் நானும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்´ என்று அமைச்சர் கருத்து தெரிவித்தார். 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அனோமா கமகே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.