2017 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் விசேட சித்திபெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. தமது கல்வி மற்றும் தொழில் தேவைகளுக்கான அடைவு மட்டத்தை அடைவதற்கு சிரமங்களை எதிர்கொள்ளும் அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறாக சிங்கள தமிழ் மக்களிடம் தமது சகோதர மொழியில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தி தொடர்பாடலில் காணப்படும் இடைவெளியை குறைத்து பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை உறுதி செய்வதற்காக ´தெரிந்தால் கற்பியுங்கள் – இல்லையெனில் கற்றுக்கொள்ளுங்கள்´ வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பது அலைவரிகளிலும் ஒலிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டு வருட பூர்த்தியுடன் இணைந்ததாக தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் 2017 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிகளிலும் ஒலிபரப்பப்பட்டது.
´தெரிந்தால் கற்பியுங்கள் – இல்லையெனில் கற்றுக்கொள்ளுங்கள்´ வானொலி நிகழ்ச்சி விசேடமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் மொழி (சிங்களம் / தமிழ்) பாடங்களை தொடரும் மாணவர்களை நோக்காகக்கொண்டு தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு தொடங்கப்பட்டதன் பின்னர் அமைச்சினால் சகல பாடசாலை அதிபர்களினூடாகவும் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் பெறுபேறாக அந்நிகழ்ச்சியை செவிமடுத்த 400 பாடசாலை மாணவ மாணவிகள் இனங்காணப்பட்டனர். அப்பாடசாலை மாணவ மாணவியர்களுக்காக க.பொ.த(சா/த) பரீட்சையின் இரண்டாம் மொழி (சிங்களம்/தமிழ்) பாடங்களை இலக்காகக்கொண்டு விரிவுரை தொடரும் நடாத்தப்பட்டது.
´தெரிந்தால் கற்பியுங்கள் – இல்லையெனில் கற்றுக்கொள்ளுங்கள்´ வானொலி நிகழ்ச்சியுடன் இணைந்ததாக இடம்பெற்ற தொடர் விரிவுரைகளின் பயனாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த (சா.த) பரீட்சையில் இரண்டாம் மொழி பாடத்திற்கு தோற்றி ஏ மற்றும் பி சித்திகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அப்பாடத்தினை போதித்த ஆசிரியர்கள் பற்றிய தரவுகள் திரட்டப்பட்டதுடன் அதில் க.பொ.த(சா.த) பரீட்சையில் இரண்டாம் மொழிக்கு ஏ மற்றும் பி சித்திகளை பெற்ற 256 மாணவ மாணவியர்கள் இனங் காணப்பட்டனர்
அந்த மாணவ மாணவியர்களுக்கு உரிய பாடங்களை கற்பித்த ஆசிரியர்களும் இதன்போது பாராட்டப்பட்டனர். 4000 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் வகையில் 10 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.
அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ´தெரிந்தால் கற்பியுங்கள் – இல்லையெனில் கற்றுக்கொள்ளுங்கள்´ வானொலி நிகழ்ச்சியை உருவாக்கியவர்களும் ஜனாதிபதி அவர்களால் பாராட்டப்பட்டனர்.
அமைச்சர்களான மனோ கணேசன், அர்ஜூன ரணதுங்க பிரதி அமைச்சர் செயித் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.சரவணபவன்,முகர்ஜி ரஹ்மான், வேலுகுமார் மற்றும் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Post a Comment
Post a Comment