ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற விமானம் - தப்பிய பயணிகள்
127 பேரை சுமந்துச் சென்ற பெரு நாட்டு விமானம் பொலிவிய விமான நிலையத்தில் இறங்கும்போது ஓடு பாதையில் இருந்து வழுக்கி விலகிச் சென்றது. அதில் இருந்த 127 பேரும் உயிர் தப்பினர்.
'பெருவியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 737 விமானம் பொலிவியாவின் தலைநகர் லா பெஸ்-சில் உள்ள எல் ஆல்டா விமான நிலையத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விமானம் கஸ்கோ நகரில் இருந்து வந்துகொண்டிருந்தது.
122 பயணிகளுக்கும், ஐந்து ஊழியர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி 10 மணிக்கும், கிரீன்விச் நேரப்படி 14 மணிக்கும் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து காரணமாக விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டது.
லேண்டிங் கியர் உடைந்து, டயரும் வெடித்ததால், விமானத்தை ஓடுபாதையில் இருந்து நகர்த்த கிரேன் கொண்டுவரப்பட்டது.
விமானம் பறக்கும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இறங்கத் தயாராகும்போது விமானி எச்சரிக்கை எதையும் தரவில்லை என்றும் பிறகு பயணிகள் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் 'பெருவியன் ஏர்லைன்ஸ்' தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment