மகிந்தவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தால் அன்றும் நாங்கள் அவருடனேயே

(க.கிஷாந்தன்)
மகிந்த ராஜபக்சவிற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தால் அன்றும் நாங்கள் அவருடனேயே இணைந்திருப்போம் அதற்கு காரணம் இது கட்சி பேதங்களுக்கு அப்பால் பட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல்பாடாகும் எனவே இதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக என்பதைவிட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான கலாநிதி வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று 09.11.2018 அன்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் மலையகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து கொண்டவர்கள் அனைவரும் பங்குபற்றினர்.
கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணியின் பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், அரவிந்தகுமார் அதேபோல கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன்,
இன்று இந்த நாட்டில் அரசியலில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது அந்த அனைத்து செயல்பாடுகளையும் மலையக மக்களாகிய நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அன்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு மலையக மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்கினார்கள் ஆனால் இன்று அந்த வாக்குகளுக்கு விரோதமாக செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தனித்தனியாக முடிவுகளை எடுக்க முடியாது அதற்காக மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்கவில்லை அவர்கள் இருவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு மலையக மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தார்கள்.
இன்று அந்த மக்கள் அளித்த வாக்குகளுக்கு எதிராக ஜனாதிபதி அவர்கள் செயல்படுகின்றார்கள் இந்த மக்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு அல்லது அரசாங்கத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இன்னுமொரு புதிய பிரதமராக நியமிப்பதற்கு மக்கள் தங்களுடைய ஆணை வழங்கவில்லை எனவே அன்று கூறியதை போல எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதை இந்த ஜனாதிபதி அவர்கள் மறந்து செயல்படுவது எங்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றது.
ஜனாதிபதி அவர்கள் இன்று தெரிவிக்கின்றார்கள் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகரை அழைத்தேன் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அழைத்தேன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு ஆனால் அவர்கள் அதற்கு முன் வரவில்லை என்று கூறுகின்றார்கள் இது எந்த விதத்திலும் பொருத்தமற்ற ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக ஜனாதிபதி செயற்பட முன்வந்தமை ஆனது அந்தக் கட்சியின் ஒற்றுமையை குலைக்கும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த நிலைமை தொடர்பாக ஜனாதிபதி எங்களோடு கலந்துரையாடியிருக்கலாம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்களும் அது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்தாலோசனை செய்து இருக்கலாம் காரணம் எங்களுடைய மக்கள் இந்த ஜனாதிபதியின் வெற்றிக்காக அதிகப்படியான வாக்குகளை வழங்கி னார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
ஒரு நாட்டின் பொறுப்புள்ள தலைவராக அவர் எடுக்கின்ற முடிவுகள் இன்று எத்தனை பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது சர்வதேசரீதியாக எங்களுடைய நாடு பல பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது பல மேற்குலக நாடுகள் எங்களுடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்து தாங்கள் செய்ய முன்வந்த உதவிகளை கூட நிறுத்தி வைத்திருக்கிறது சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு இலங்கை ஒருபோதும் முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவே இவ்வாறான முடிவுகளை எடுக்கின்ற பொழுது மிகவும் அவதானமாகவும் மிகவும் சிந்தனையுடனும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை முப்பது வருடகால யுத்தத்தின் பின்பு தற்பொழுது படிப்படியாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது அந்த அபிவிருத்திக்கு முக்கிய காரணமாக இருப்பது சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் இலங்கை தொடர்பாக நல்லெண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றது எங்களுக்கு பல்வேறு வழிகளிலும் சர்வதேசம் தங்களுடைய உதவிகளை செய்து வருகின்றது எனவே அந்த உதவிகள் இல்லாமல் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எங்கள் முன்நிற்கின்றது இன்று பல அமைப்புகளின் செயல்பாடுகள் முடங்கி இருக்கின்றது சுற்றுலாத்துறை முழுமையாக பாதிப்படைந்திருந்தது பல நாடுகள் தங்களுடைய பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தடை செய்திருக்கின்றது.
இலங்கை பாதுகாப்பற்ற ஒரு நாடு என்பதை பல நாடுகளும் தற்போது அறிவித்திருக்கின்றது இதற்கெல்லாம் காரணம் எங்களுடைய இந்த அரசியல் ஸ்திரத்தன்மை என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தீர்மானங்களை எடுக்க கூடாது தீர்மானங்களை எடுக்கின்ற பொழுது மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் இந்த நாட்டினுடைய அனைத்து மக்களுக்கும் எடுக்கின்ற தீர்மானங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் உங்கள் அனைவருக்கும் தெரியும் மறைந்த சோபித்த தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பல்வேறு வழிகளிலும் தன்னை அர்ப்பணித்து சேவை செய்தவர் ஆனால் அவருடைய சிரார்த்ததின நிகழ்வுக்கு ஜனாதிபதி அவர்கள் செல்லவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும் காரணம் அவர் நல்லாட்சி அரசாங்கம் வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரையே பணயம் வைத்து செயல்பட்டவர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியை இந்த பதவிக்கு கொண்டுவருவதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களுடைய உயிரை பணயம் வைத்து செயல்பட்டார்கள் என்று பலருக்கும் உயிரச்சுறுத்தல் இருந்தாலும் அவற்றையெல்லாம் அவர்கள் துச்சமாக மதித்து இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தார்கள் ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது இன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய அந்த அர்ப்பணிப்பை நினைத்து மிகவும் வருத்தப் படுகிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமல் இந்த ஜனாதிபதி ஒருநாளும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவருக்கும் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததும் அடுத்த தேர்தலில் அதற்கான உரிய பாடத்தைப் புகட்டும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இன்று அணி திரண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
ஜனாதிபதி கடந்த 26ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை இன்று அரசியல் கட்சிகளுக்கு அப்பால் சென்று பல்வேறு தரப்பினரும் இதனை ஒரு தவறான செயல்பாடாகவே கருதுகின்றார்கள் குறிப்பாக இந்த நாட்டில் இருக்கின்ற புத்திஜீவிகள் ஏனைய கட்சிகளை சார்ந்தவர்கள் ஜனாதிபதியின் கட்சியை சார்ந்தவர்கள் கூட இதனை ஒரு பிழையான முன்னெடுப்பு என்பதை தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.
எனவே மீண்டும் இலங்கையில் சுமுகமான ஒரு நிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை யாருக்கு இருக்கின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் நிரூபித்து அவர்களிடம் இந்த அரசாங்கத்தை கையளித்து ஜனநாயக ரீதியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க முன்வரவேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.


Advertisement