பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார்.
பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுகின்ற பொறிமுறையான 50வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.
இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தாமதமாகும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.
பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிஎம்டி நேரப்படி மாலை 6 முதல் 8 மணிக்குள் இந்த வாக்கெடுப்பில் வாக்கு செலுத்தவுள்ளனர்.
AFP
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கி கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் மே கூறியுள்ளார்.
பிரதமர் தெரீசா மே மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு தேவையான 48 கடிதங்களை பெற்ற பின்னர், பிரதமர் பதவிக்கு இந்த சவால் எழுந்துள்ளது.
2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது தெரீசா மே பிரதமராக பதவியேற்றார்.

- பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தை
- பிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பு ரத்து - தெரீசா மே

அதன் பின்னர் அவர் நடத்திய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையால் அவரது கட்சிக்குள்ளேயே தெரீசா மே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
ரகசியமாக நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் பிரதமர் தெரீசா மே இதில் வெற்றிபெற வேண்டுமென்றால், பெரும்பான்மையான வாக்குகளை பெற்றாக வேண்டும்.
இவ்வாறு தெரீசா மே பெரும்பான்மை பெற்றுவிட்டால், இன்னும் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.

தெரீசா மே இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறாவிட்டால், கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால், இதில் தெரீசா மே போட்டியிட முடியாது.
தெரீசா மே ஒட்டுமொத்தமாக இல்லாமல் சிறிய பெரும்பான்மையில் வென்றுவிட்டால், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்யலாம்.
கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டன் பிரதிநிதிகள் அவையில் மிக பெரிய கட்சியாக இருப்பதால் இதன் தலைவராக இருப்பவர் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்கு காரணமாகும்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரீசா மே தோற்றுவிட்டால், ஆறு வார நடைமுறையில் கட்சி உறுப்பினர்களால் புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் வரை தற்காலிக பிரதமராக தெரீசா மே நீடிப்பார்.
இந்த கட்சியில் பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், கட்சி உறுப்பினர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தொடர் வாக்கெடுப்புகளை கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்துவர்.


Post a Comment
Post a Comment