(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் பிணையில் விடுவிக்குமாறும் கெப்பித்திகொல்லாவ நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் எச். கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் இன்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே இடத்தைச் சேர்ந்த ஜூனைதீன் நஸ்லிம் சறூக்(35வயது) எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த ஐனவரி மாதம் 30ம்திகதி ஹொரவ்பொத்தான நகர்ப்பகுதியில் 1000 ரூபாய் 29 போலி நாணயத் தாள்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் போது மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 11ம் திகதி கைது செய்யப்பட்டார்.
பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" கைது செய்யப்பட்டதையடுத்து ஆயிரம் ரூபாய் 29 வுடன் கைது செய்யப்பட்ட மஹதிவுல்வெவ மூன்று இளைஞர்களுக்கும் தலா 15000/=ரூபாய் காசுப்பிணையிலும், தலா ஒரு இலச்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறும் நீதவான் கட்டளையிட்டார்.
இதையடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுமாறும், நீதவான் கட்டளையிட்டார்.
அத்துடன் மொரவெவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 175000/= கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி இவரே பிரதான சந்தேக நபர் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" மை திருகோணமலை நீதிமன்றத்தில் எதிர்வரும் 26ம் திகதி ஆஜர்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.


Post a Comment
Post a Comment