ஸ்மித், வார்னர் - அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிரம்பிய உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி


பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இதுவரை உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமைTWITTER/CRICKETCOM.AU
மேலும் இன்று மாலையில் இந்திய அணியும் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்) டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா , ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நேதன் கோல்டர் நைல், ஜேசன் பெர்ண்டோர்ப், ஆடம் ஜாம்பா மற்றும் நேதன் லயன்.
கடந்த உலக கோப்பையில் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்த வேகப்பந்துவீச்சாளரான ஜேசன் ஹேசல்வுட் மற்றும் இந்தியாவுடன் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.