காங்கேசன் துறையில்,கடற்படைச் சிப்பாய் உயிரிழப்பு

காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்தில் நேற்று மாலை மின்சாரம் தாக்கியதில் சிப்பாய் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கொசஸ்வத்தை, கெஹரண பகுதியினை சேர்ந்த சாமல் லசந்த வெத்தசிங்க எனும் 28 வயதுடைய கடற்படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் கடலில் இருந்து கடமை முடித்து துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த கப்பலினை கரையோடு அனைத்து கட்டுவதற்கு முயன்றபோது துறைமுகத்திற்கு அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தினை பிடித்த போது ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து வந்த நிலையில் சம்பவத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு இருந்தார்.

உடனடியாக காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் கடற்படைச் சிப்பாய் உயிரிழந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதி செய்தது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை கடற்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ். நிருபர் சுமித்தி)--- Advertisment ---